தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோபாலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலில், திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணியினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோபாலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலில், திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணியினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் இன்று (14.09.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளும், திருக்கோயில் நிலங்களை பாதுகாக்கும் வகையிலும், நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியோடு அளவீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் ஆக்கிரமிப்புகளை அகற்றியது செய்யப்பட்டது தொடர்பான மற்றும் நிலங்கள் அளவீடு முதல் புத்தகம் கடந்த 18.05.2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் இரண்டாம் பகுதி புத்தகம் கடந்த 08.09.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 28 மாதங்களில் 653 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான 5722 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு. ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 999 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 93 சென்ட் நிலத்தை அளவீடு செய்ததன் மூலம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை நிறைவு செய்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 1,50,001 (ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரத்து ஒன்றாவது) ஏக்கர் அளவிடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. 

இதனை தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கோண்டார்கள். பின்னர், தருமபுரி கோட்டக்கோயில்- அருள்மிகு மல்லிகார்ஜூனேஸ்வர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயிலில் திருத்தேர் திருப்பணியினை தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 
திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு  சொந்தமான நிலங்களை DGPS (Differential Global Positioning System) கருவி மூலம் நில அளவையாளர்களை கொண்டு அளவிடும் பணியானது கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாப்பூர் திருக்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டு,  50,000-வது ஏக்கர் நிலங்களை அளவிடும் பணியானது காஞ்சிபுரத்தில் முடிவுற்று, 50,001-வது ஏக்கர் நிலம் அளவிடும் பணியை தொடங்கி வைத்தோம். அதனைத் தொடர்ந்து, நில அளவையாளர்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் அளவிடும் பணி திருவள்ளூர் மாவட்ட பவானி திருக்கோயிலில் முடிவுற்று, 1,00,001-வது ஏக்கர் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது, தருமபுரி மாவட்டத்தில்  1,50,000 ஏக்கர் நிலம் அளவிடும் பணி  DGPS கருவியின் வாயிலாக நிறைவு செய்யப்பட்டு, திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி இன்றைய தினம் பேட்ராய சுவாமி திருக்கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலபைரவர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளான திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறுகின்ற காலபைரவர் வழிபாட்டின் போது விளக்கு ஏற்றுகின்ற வகையில் விளக்கேற்றும் இடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் தருமபுரி கோட்டக்கோயில்- அருள்மிகு மல்லிகார்ஜூனேஸ்வர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது மண்டல மற்றும் மாநில குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் இ-டென்டர் கோரப்பட்டுள்ளது. டென்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும், இன்றைய தினம் இத்திருக்கோயிலில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தேர் பணிகள் நிறைவுபெற்று, வருகின்ற தை மாதத்தில் பக்தர்கள் வணங்குவதற்கு ஏதுவாகவும், இத்திருத்தேர் திருஉலா வருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

 
இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட வருவாய் அலுவலர் (இந்துசமய அறநிலையத்துறை) திருமதி ஜி.விஜயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி வே.சபர்மதி, தருமபுரி உதவி ஆணையர் திரு.  மா. உதயகுமார், தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பெ.கௌதமன்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 
திருமதி அ.ச.மாது சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி மகேஸ்வரி பெரியசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர்கள் திரு.ஜீவானநந்தம், திரு.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post

نموذج الاتصال