பாப்பிரெட்டிப்பட்டி நவ 18-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரவைக்கு சுமார் 10,000 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு சுமார் 3,25,000 மெ.டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் சுமார் 200 வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாய பெருமக்களும் ஆலைக்கு சுத்தமான கரும்பை வெட்டி அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
கடந்த அரவைப்பருவத்தில் 10.91 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதன் அடிப்படையில் நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.3349.55 வீதம் வழங்கப்படும். இது தமிழகத்திலேயே டன் ஒன்றிற்கான கரும்பின் அதிகபட்ச விலை ஆகும்.
தமிழ்நாடு அரசு கடந்த 2022-23 அரவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகை அவர்கள் அனுப்பிய கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.195.00 வீதம் வழங்க உத்திரவிட்டுள்ளது. அத்தொகையானது 4607 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அதாவது ரூ.712.00 இலட்சம் நேரடியாக அனுப்பப்பட உள்ளது.
மேலும் கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும் ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க தனியான இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2022-2023-ஆம் அரவைக்கு 11,000 டன்கள் கரும்பு இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து அங்கத்தினர்களை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு அரவைக்கு சுமார் 30,000 டன்கள் இயந்திர அறுவடை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டு இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக விவசாயிகள் தங்களது நிலத்தில் நான்கரை அடி இடைவெளியில் அகலப்பார் முறையில், தமிழ்நாடு அரசின் மானியத்துடன் கூடிய நிலத்தடி சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைத்து கரும்பு சாகுபடி மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு 2023-24ஆம் நிதி ஆண்டிற்கு (KAVIADP) பருநாற்று நடவு மற்றும் ஒரு பரு கரணை நடவிற்கு 24 பயனாளிகளுக்கு 15.16 ஹெக்டருக்கு ரூ.1,57,475/- மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (NADP) வல்லுநர் விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்று, பருநாற்று நடவு, ஒரு பரு கரணை மற்றும் சோகை தூளாக்குதல் ஆகியவற்றிற்கு நடப்பு 2023-24ஆம் நிதி ஆண்டிற்கு 55 பயனாளிகளுக்கு 43.80 ஹெக்டருக்கு ரூ.5,17,250/- மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு ரூ.2914.60/- காப்பீடு நிறுவனம் IFFCO Tokio மூலம் மார்ச் 30-க்குள் (2024) செலுத்தி பயன்பெற அனைத்து விவசாமிகளையும் கேட்டுக்கொள்ளபடுகின்றது.
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வேர்புழு தாக்குதலின் தாக்கம் 473.75 ஏக்கரில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால் தாக்கம் ஏற்பட்டுள்ள வயல்களுக்கு வெட்டு உத்திரவு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் திருமதி.உண்ணாமலை குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.தாமோதரன், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.குமார், கோபாலபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் திரு.விஜயகாந்த் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Tags
தருமபுரி