ஒரே குடும்பத்தில் 3 மருத்துவ மாணவர்கள் - நீட் தேர்வில் தேர்ச்சி!

தர்மபுரி செப் 11-

தர்மபுரி மாவட்டம் தண்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தை ஒரு விவசாயி, மனைவி மாதம்மாள். இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் என 2 மகன்களும் உள்ளனர்.

மூவரும், 1 முதல் 8 ஆம் வகுப்பை தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியிலும், 9 முதல் 12 வகுப்பை ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளனர். 

மூத்த மகள் பள்ளிப்படிப்பை நன்றாக படித்து வந்ததால், அவரை நிலத்தை விற்றாவது டாக்டராக்க வேண்டும் அவரது பெற்றோர் ஆசைப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு சந்தியா 12ம் வகுப்பை முடித்தார். 

சென்னையில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் மகளை சேர்த்து படிக்க வைத்தார். ஆனால், அம்முறை அவர் நீட் தேர்வில் தகுதி பெறவில்லை. 

அவரது டாக்டர் கனவை கலைத்துக் கொண்டு, தர்மபுரி அரசு கல்லூரியில் சேர்ந்தார். 

நீட் தேர்வில் 7.5% சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அப்போதைய அரசு நிறைவேற்றியது. 

இதனால் மீண்டும் உத்வேகம் பெற்ற சந்தியா, கொரோனா லாக்டவுனை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருந்தே நீட் தேர்வுக்கு விடாமுயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்

தங்களது மருத்துவக் கனவை சாதிக்க அக்காவை ரோல் மாடலாக்கி கொண்ட தம்பிகள், வரிசையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வினை துணிச்சலுடன் சந்தித்தனர். 

ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் இருவரும் எம்.பி.பி.எஸ் சேர வேண்டும் என்று தீவிரமாக படித்தனர். 

இவர்களது முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆதரவளித்துள்ளனர்.

கடந்த 2023-24 கல்வி ஆண்டில் நீட் தேர்வில் 434 மார்க்குகள் பெற்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஹரி பிரசாத் மருத்துவப் படிப்பில் இணைந்தார். 

அதேபோல், சூரிய பிரகாசுக்கும் அவரது பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் இந்த ஆண்டு நீட் தேர்வில் 545 மதிப்பெண்கள் பெற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து அக்காவுக்கு ஜூனியராகியுள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்.பி.பி.எஸ் சேர்ந்து பள்ளிக்கு பெருமைத் தேடி தந்துள்ளனர். 

அதே போல், விவசாயியின் பிள்ளைகள் மூவரும் மருத்துவ கனவை நிறைவேற்றியிருப்து அக்கிராம மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال