தர்மபுரி அக் 15-
தர்மபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் மழலையர் வண்ண விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சி, உணவுத் திருவிழா மற்றும் மழலையர் வண்ண விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக அலுவலர் சி. சக்திவேல் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் 500-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்திராயன் விண்கலம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. சிறுதானியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
மேலும் வண்ண விழாவில் குழந்தைகளின் அணிவகுப்பம், பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த கண்காட்சி மற்றும் திருவிழாவினை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் வள்ளியம்மாள், ரபீக் அகமது, துணை முதல்வர் கவிதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் செய்திருந்தனர். தொடர்ந்து இந்த அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா (திங்கட்கிழமை) மாலை வரை நடைபெற உள்ளது.
Tags
தர்மபுரி