ஈரோடு அக் 16-
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானி ஆற்றில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
மேலும் பாசனப்பகுதியில் பரவலாக மழை பெய்து உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 67.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 261 கன அடி தண்ணீர் வந்தது.
பவானிசாகர் அணையின் வரலாறு
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். [1]. அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது
Tags
ஈரோடு