தருமபுரி டிசம்பர் 16-
மாநிலம் முழுவதும் 8,096 பேர் பங்கேற்ற 'கனவு ஆசிரியர்' தேர்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முண்டாசு புறவடை ஆசிரியர் திருமதி. அ.வெ.மனோ கனவு ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதேபோல், மீத்திறன் படைத்தத் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்க கனவு ஆசிரியர் செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான முதல் நிலை தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
இதில், மாநிலம் முழுவதிலுமிருந்து 8,096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்ட 1,536 ஆசிரியர்களுக்கு மண்டல அளவில் இரண்டாம் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்வான 964 ஆசிரியர்களுக்கு நேரடி செயல்விளக்க வகுப்பறைச் செயல்பாடுகளை மதிப்பிடுதலின் அடிப்படையில் மூன்றாம் நிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. இவற்றில் 75சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 ஆசிரியர்கள்
நடப்பாண்டிற்கான கனவு ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாமக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 380 ஆசிரியர்களுக்கும் கனவு ஆசிரியர் விருது வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், முண்டாசுப்புறவடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் திருமதி அ.வெ.மனோ கனவு ஆசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை ஊர்ப் பொது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் பள்ளிக்கல்வித் துறையின் சிறார் இதழ்கள் மற்றும் கனவு ஆசிரியர் இதழுக்கான தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
தருமபுரி