பென்னாகரம் பிப் 2-
பிக்கிலி ஊராட்சி குறவன்திண்ணை கிராமத்தில் மூன்று மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் திண்ணை, பாணாகட்டு கிராமங்களில் சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குறவன் திண்ணை கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த்தொட்டி மற்றும் பாணாகட்டு கிராமத்தில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி ஆகியவை ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வில்லை என்று கூறி இந்த நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிக்கிலி சாலையில் புதுகரம்பு பகுதியில் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர் இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
Tags
தருமபுரி