காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் விபத்துகள், குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை பிப் 5-


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் திருடு போன பல ரூபாய் கோடி மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் ரூ.19.21 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3.6 கோடி ரொக்கப் பணம், 798 கைப்பேசிக் கருவிகள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அவை மீட்கப்பட்டு பொதுமக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு மத்திய குற்றப்பிரிவு விசாரித்த 811 வழக்குகளில் தொடர்புடைய ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 450 குற்றவாளிகள் உள்பட 1,109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆணையர் கூறினார்.

“கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைதான 714 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“மேலும், 70 ரவுடிகள், 78 போதைப் பொருள் குற்றவாளிகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்ட 74 குற்றவாளிகள் உட்பட 2,748 குற்றவாளிகளுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது,” என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 499 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அவற்றில் சிக்கி 504 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் காவல் ஆணையர் குறிப்பிட்டார்.

மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக 21 வழக்குகளும் பெண்களைக் கடத்துவது தொடர்பாக 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

310 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள போதும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சென்னையில் முந்தைய ஆண்டைவிட குற்றச் செயல்களும் விபத்துகளும் குறைந்துள்ளன என்றார் காவல் ஆணையர்.
Previous Post Next Post

نموذج الاتصال