பாப்பிரெட்டிப்பட்டி பிப் 24:-
போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் செல்பேசியை மாணவர்கள் பயனுள்ள தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும் என்று இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இராம. செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தகடூர் புத்தக பேரவை சார்பில் போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் போட்டிகள் நிறைந்த உலகில் போட்டு தேர்வுகள் என்ற தலைப்பில் இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இராம. செல்வம் சிறப்புரையாற்றினார்.
அவர் மாணவர்கள் மத்தியில் பேசும் போது "மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிக அவசியமாகிறது. தங்களுக்குள் உள்ள திறமைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். இன்றைய காலகட்டத்தில் செல்பேசி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. செல்பேசி தொழில்நுட்பத்தை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சி அடைந்தவர்களை பின்னோக்கி பார்த்தால் அவர்களின் கடின உழைப்பே வளர்ச்சிக்கு காரணமாக அறிய முடியும். உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியத்துடன் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
தங்களது இலக்கினை அடைய மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டு தொடர் முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. முயற்சியே செய்யாதவர்கள் தான் தோல்வி அடைந்தவர்கள். இதை மனதில் வைத்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.
மாணவப் பருவம் ஆற்றல் மிக்க பருவம், நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். என்றார் இராம.செல்வம்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்தி டாக்டர் செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் இரா. அருண், தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை மாநில கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, பேராசிரியர் மனோகரன், கல்லூரி முதல்வர் அன்பரசி, தகடூர் புத்தகப் பேரவையின் மருத்துவர் செந்தில், சிசுபாலன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
Tags
தருமபுரி