பென்னாகரம் ஏப்.28-
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் கடும் வெப்ப சலனம் காரணமாக வார விடுமுறையில் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்தும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதாலும், கடும் வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றில் அங்கங்கே தேங்கியுள்ள குட்டைகளில் கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் குளித்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து தொங்கு பாலத்தில் இருந்து அருவியின் அழகை கண்டு ரசித்தும், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சிகள் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால்,வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் மசாஜ், சமையல் தொழிலாளர்கள் வருவாய் இழந்துள்ளனர். ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, நடைபாதை,மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
Tags
பென்னாகரம்