வந்தவாசி,ஜூலை.2-
வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி அப்பளத்தில் 1330 திருக்குறள்களை எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. திருக் குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதிய முயற்சியாக,1330 திருக்குறளை 1330 அப்பளத்தில் எழுதியுள்ளனர். ஆரம்பப்பள்ளி மாணவர்களின் இந்த தனித்திறமையை வெளிக்கொண்டு வர பயிற்சி கொடுத்த இந்தப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சா.ரஷீனா கூறும்போது, உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இந்த பள்ளி மாணவர்கள் ஏற்கனவே உலக சாதனை நிகழ்த்தியவர்கள்.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் இத்தகைய புது முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது வழக்கம்.அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில், ஏறத்தாழ இந்தபள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 1 மாதமாக பயிற்சி கொடுத்தேன். இப்பொழுது எழுதி முடித்திருக்கிறார்கள்.சில மாணவர்கள் திருவள்ளுவர் வேடம் அணிந்து வந்து எழுதினார்கள். ஏறத்தாழ ஓலைச்சுவடியின் வடிவத்தில் அப்பளம் இருப்பதால் அதில் எழுத பயிற்சி கொடுக்கப்பட்டது.இதை எழுதுவதின் வாசிப்பதன் மூலமாக திருக்குறளில் உள்ள கருத்துக்களை உள்வாங்கி மாணவர்கள் ஒழுக்கத்தில் மேம்படுவார்கள் என்பது என் எண்ணம். இந்த முயற்சி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, ஆசிரியப் பயிற்றுநர் திருவேங்கட லட்சுமி ஆசிரியைகள் சா.ரஷீனா, மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.
படவிளக்கம்: வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 1330 திருக்குறளை அப்பளத்தில் எழுதினர்.பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி,ஆசிரியைகள் சா.ரஷீனா, மாலதி உடனிருந்தனர்.
Tags
வந்தவாசி