ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 1.30 லட்சம் கன அடியாக சரிவு


பென்னாகரம், ஆக.3-

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவ மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை முதல் சரியத் தொடங்கியது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 2.05 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1.70 லட்சம் கன அடியாகவும், மதிய நிலவரப்படி விநாடிக்கு 1.40 லட்சம் கன அடியாகவும் இருந்தது. பின்னர் மாலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது மேலும் குறைந்து விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக சரிந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர் நீர்வரத்து சரிவின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அருவிகள் அனைத்தும் மூழ்கியும், கரையோரப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் இருந்து நாட்றாம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து 2 வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 18 ஆவது நாளாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Previous Post Next Post

نموذج الاتصال