தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட `நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 நாள்களில் 72 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் உணர்வை கையெழுத்தாக பதிவு செய்துள்ளனர்.

சென்னை டிசம்பர் 10-

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை, கட்சிகளைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 29 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக இருந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா, தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் இரண்டாவது முறையாகவும் ஒருமனதாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற பல வகைகளிலும் தமிழ்நாடு அரசும் தி.மு.கழகமும் முயற்சி எடுத்து வருகின்றன. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, 2023 ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி ஆகியவற்றின் சார்பில், உண்ணாநிலை அறப் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இளைஞர் அணி மாநிலச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த உண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்பில், இந்த அறப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 50 நாட்களில் 50 இலட்சம் கையெழுத்து என்ற இலக்குடன், `நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தை, தி.மு.க இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி இணைந்து, அக்டோபர் 21-ஆம் தேதி தொடங்கியது.

Banneet.in என்ற இணையதளப் பக்கம் வாயிலாகவும், அஞ்சல் அட்டைகள் மூலமாகவும் கையெழுத்து பெறும் வகையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு, அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் கையெழுத்திட்டு, இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். கழக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பொதுமக்கள், வணிகப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தன்னெழுச்சியாக `நீட் விலக்கு நம் இலக்கு’ 
கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவளித்தனர்.

கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 நாட்கள் நிறைவடையும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 இலட்சம் என்பதையும் தாண்டி, இன்று காலை வரை 72 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் இணையம் முலம் 56 இலட்சத்துக்கு மேற்பட்டோரும், தபால் அட்டைகள் மூலம் 16 இலட்சம் பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையில் பெறப்பட்ட கையெழுத்துகளை, சேலத்தில் இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டின்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெறும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பெறப்பட்டுள்ள இக்கையெழுத்துகள், பின்னர் உரிய முறையில் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார் 

Previous Post Next Post

نموذج الاتصال