கோடை உழவு செய்து நன்மை பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்

தர்மபுரி ஏப் 27-

கோடை உழவால் ஏற்படும் நன்மைகள் கோடை உழவு கோடி நன்மை என்று முன்னோர்கள் அனுபவத்தின் அடிப்படையில், “சித்திரை மாதத்து   உழவு பத்தரை மாத தங்கம்” என்றனர்.

சித்திரை மாதத்தில் உழவு செய்து விட்டால் அவ்வுழவின் மூலம் ஏற்படும் நன்மைகளால் நல்ல மகசூல் பெறலாம் என்று தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.இளங்கோவன் அவர்கள் தெரிவிக்கிறார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

 நிலத்தில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூண்டு புழுக்கள் மற்றும் களை  செடிகளின் விதைகள் நிலத்தின் அடிப்பகுதியில் இருந்து மேல் புறத்திற்கு கொண்டு வரப்படுவதால் அதிக வெப்பநிலை காரணமாக அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் சாகுபடி செய்யப்படும் அடுத்த பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக காணப்படும். கோடை காலத்தில் உழவு செய்யும் போது வெப்பமும் குளுமையும் மண்ணுக்கு கிடைக்கும். மண்ணை புரட்டி விடும் போது முதலில் மண் வெப்பம் ஆகி பிறகு குளுமை அடையும்.இப்படி  இரண்டும் கிடைக்கும் போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும்.பெய்யும் மழை நீரானது நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிப்பகுதிக்கு சென்று அடிப்பகுதியில் தங்கும். இதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. உழவு செய்யப்படாத நிலத்தில் மேற்புறம் இறுகி காணப்படுவதால், நீர் உட்புகாது.மேலும் மழை நீர் ஆனது வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழை  சத்தினை அதிகரிக்கச் செய்யும். கோடை உழவினை சரிவுக்கு குறுக்காக உழ வேண்டும். இதனால் கோரை போன்ற கிழங்கு வகைகளை கட்டுப்படுத்தப்படுகின்றன. கோடை உழவினால் அறுவடை போக எஞ்சியுள்ள பயிர் கழிவுகள் களை  செடிகளின் எஞ்சிய பகுதிகள் நிலத்தில் மடக்கி உழப்படுவதால் நன்கு மக்கி பயிருக்கு தேவையான சத்துக்களை அழிப்பதால், மகசூலும் நிலத்தின் மண் வளமும் அதிகரிக்கிறது. நிலத்தின் மேட்டு பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி  உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவு செய்வதால் மழை பெய்யும் போது மேட்டுப்பகுதியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தாழ்வான பகுதிக்கு போய்விடும்.குறுக்கு உழவு செய்தால் ஆங்காங்கே சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படும். மழை நீரும் பூமிக்குள் சேகரிக்கப்படும். கோடை உழவுக்கு  பிறகு சிறுதானியங்கள், நிலக்கடலை, எள் மற்றும் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.கோடை உழவு செய்வதால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய செயல்கள் மூலம் மண்வளமும் மகசூலும் அதிகரிக்கும். இதனால் கோடை உழவினை பருவம் தவறாது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகளை தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மு.இளங்கோவன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال