தர்மபுரி, ஜூன்.11-
தர்மபுரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் 'பாஜகவின் மன்னராட்சியைத் தகர்த்தெறிந்த ஜனநாயகக் கொண்டாட்டம்!' என்னும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் மாநில மகளிர் அணித்தலைவர் ஹசீனா சையத் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் காளியம்மாள் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முன்னாள் தர்மபுரி எம்.பி தீர்த்தராமன், கட்சி நிர்வாகிகள் வக்கீல் மோகன், தங்கவேல், தனலட்சுமி, பாலமுருகன்,ரேவதி, விநாயகம், ஜெய்சங்கர் , மணிகண்டன், முபாரக், சதீஷ் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசீனா சையத் நிருபர்களிடம் அளித்த பேட்டி;
'பாஜகவின் சர்வாதிகார மன்னராட்சியை உடைத்து வீழ்த்தியிருக்கிறது தமிழ்நாடு . தமிழன் என்று சொல்வதில் நமக்கு பெருமை. மாண்புமிகு என்பதற்குரிய மரபை இழந்த பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்யாததை இந்த 5 ஆண்டுகளில் செய்வோம் என்று கூறுகிறார். ஆண்டுகளுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்ன மோடி தனது 10 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா? ராமர் கோயிலை கட்டியதை சாதனையாக கூறும் மோடி செல்வாக்கை இழந்து விட்டார்.
மக்கள் செல்வாக்கை இழந்தது வரும் பிரதமர் மோடி நேரு போல் ஆட்சி செய்வோம் என்பது வெட்கக்கேடானது ஆகும். நமது நாட்டில் 70 கோடிக்கு அதிகமாக உள்ள பெண்களுக்கு மோடி என்ன செய்தார். பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை. ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலிமையாக உள்ளது. இதனை எப்படி மோடி சமாளிப்பார்?' என்று ஹசீனா சையத் கேள்வி எழுப்பினார்.
படம்: மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசீனா சையத் பேட்டி அளித்தார்.
Tags
தருமபுரி