தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மூங்கப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கணபதி பூஜையுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அச்சம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து அருகில் உள்ள தமக்களப்பன் சுவாமி, முனியப்பன் சுவாமி, கொல்லாபுரி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து
பெண் பக்தர்கள் கரகம் எடுத்தும் மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம் அணிந்து மேளாதாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக ஸ்ரீஊர்மாரியம்மன் கோயிலை சென்றடைந்து அம்மனை வழிபட்டனர்.
பொங்கல் வைத்தும், கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
ஸ்ரீ ஊர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.